Wednesday, May 22, 2013

தங்கத்தின் வீழ்ச்சி






 எமது வாழ்க்கையுடன் அல்லது கலாசாரத்துடன் பின்னி பிணைந்த ஒன்றாக தங்க நகைகள் காணப்படுகிறது. குழந்தை பிறந்ததும் காதுகுத்துதல் என்று ஆரம்பித்து திருமணம் வரை தங்கத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இதன் விலை அதிகரிக்க அதிகரிக்க தங்கத்தின் மீதான மோகமும் அதிகரித்துள்ளது. கடந்த அட்ஷய திருதியை நாளில் இதனை அவதானிக்க கூடியதாக இருந்தது. அட்ஷய திருதியை அன்று நாம் செய்யும் நல்ல காரியங்கள் அனைத்தும் வளர்ச்சியடையும் என்று சொல்லப்பட்டாலும் அன்றய தினம் தங்கம் வாங்குவதிலேயே அனேகர் ஈடுபட்டனர். தங்கத்துக்கான மதிப்பு இவ்வாறிருக்க  மறுபுறத்தில் இதைனை பயன்படுத்துவதால் கொலை கொள்ளை போன்ற  ஆபத்துக்களும் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் தங்கதின் விலையானது வேகமாக என்றுமில்லாதளவு அதிகரித்து வந்ததும் நடுத்தர வர்க்கத்தினர் இனிமேல் தங்க நகைகளை வாங்க முடியாது என்கிற அளவு  உயர்வாக தங்கத்தின் விலை காணப்பட்டதும் யாவரும் அறிந்த ஒன்று. ஆனால் யாரும் எதிர்பாராத அளவு அதன் விலையானது திடீரென குறைந்தது ஆச்சரியம்தான். காரணம் எந்தப் பொருளுக்கும் விலையை ஏற்றம்போது கிடுகிடுவென ஏற்றிவிடுவார்கள்.ஆனால் இறங்கும்போது அதே வேகம் இருக்காது. அதுவும் தங்கம் என்றால் சொல்லவும் வேண்டுமா? இப்படி இருக்க 65 ஆயிரம் ரூபா வரையில் விற்பனையான ஒரு பவுண் தற்போது 48 -50 ஆயிரம் வரை விற்பனையாகிறது.தங்கத்தை பொறுத்தவரை இது பெரும்வீழ்ச்சிதான். இந்த விலை வீழ்ச்சியானது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை தந்தாலும் பல நாடுகளின் பொருளாதார நிபுணர்களும் அடுத்து நடக்கப்போவது என்ன? என்ற அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.



தங்கம் அல்லது (gold) என்பது மஞ்சள் நிறமுள்ள வார்ப்பதற்கு எளிதான ஒரு உலோகமாகும். நரைவிட 19 மடங்கு எடையுடைய தங்கம் தட்டையாக்கக்கூடியதும் நீட்டக்கூடியதுமான பண்புகளைக் கொண்டது. அத்துடன் துருப்பிடிக்காது காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. எப்போதுமே பளபளப்பாக இருக்கக்கூடிய ஒரு உலோகமாகும். இந்த தன்மைகளை கொண்டமையாலேயே உலக சந்தையில் தங்கத்திற்கு அவ்வளவு மதிப்பு இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி ஆபரணங்கள் செய்யப்படுவதுடன் முற்காலத்தில் நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டது.

   தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனிநிலையிலேயே ரேகைபோல பாறைகளில் படர்ந்திருக்கும். இவை சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது. அதேபோல் பாறைகளில் வெடிவைத்து தகர்த்து இரசாயன வேதியல் முறையில் பிரித்தெடுக்கிறார்கள் அதன்பின் மின் பகுப்பு முறையில் சுத்தம்செய்யப்படுகிறது............





இந்த உலகில் மிகவும் அதிகமாக சுரண்டப்படும் பிரிவாக தரைக்கடியில் வெகு ஆழத்தில் கற்பனைக்குமெட்டாத கடினமான மற்றும் ஆபத்தான நிலைமைகளின் கீழ் இந்த பாறை துளையிடும் தொழிலாளர்களைக் கூறமுடியும். என்னதான்  தங்கத்தின் விலையும் அதன் கேள்வியும் உலகளவில் அதிகரித்தாலும் இந்த தொழிலாளருக்கான மதாந்த சம்பளம் 500 அமெரிக்க டொலர்களே. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் லோன்மின் என்ற தென்னாபிரிக்க பிளாட்டினச் சுரங்கத்திலிருந்து வெளிநடப்பு செய்த தொழிலாளர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 34- 50 வரையான தொழிலாளர் கொல்லப்பட்ட துயர சம்பவத்தை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதியளவு தென்னாபிரிக்காவிலேயே வெட்டி எடுக்கப்படுகிறது. இருந்தும் அந்த சமூகத்தின் நிலை இவ்வாறுதான் இருக்கிறது. இதைவிட கனடா, அமெரிக்கா ஜக்கிய நாடுகள் மற்றும் அவுஸ்ரேலியா கொரியா ஆகிய நாடுகளிலும் தென்அமெரிக்காவிலும் தங்கமானது வெட்டி எடுக்கப்படுகிறது. அதேபோல் இந்தியாவில் கர்நாடக மானிலத்தில் கோலார் என்னுமிடத்திலும் இவை கிடைக்கிறது. இலங்கையிலுள்ள பூகோடை என்ற இடத்தில் களனி ஆற்றுப்பகுதிகளில் ஆற்றுமண் படிவுகளில் அண்மைக்காலங்களில் சிறிய அளவுகளில் பெறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



இந்த தங்க விலைக்குறைவையிட்டு பொருளாதார நிபுணர்கள் ஏன் கவலையடைகிறார்கள்எனின் எப்போதெல்லாம் தங்கத்தின் விலைகுறைகிறதோ அப்போதெல்லாம் பெரியதொரு பொருளாதர தேக்கம் ஏற்பட்டிருக்கிறது.

1929 ம் ஆண்டில் கிரேட்டிப்ரஸன் எனப்படும் மாபெரும் பொருளாதர முடக்கம்     ஒன்று ஏற்பட்டது. ஆனால் இப்பொழுதுபோன்று பொருளாதாரரீதியாக நாடுகள் மற்றைய நாடுகளைச் சார்ந்து இருக்கவில்லை. ஆனால் இன்றய நிலை அவ்வாறில்லை அமெரிக்காவுக்கு வருத்தம் என்றால் இந்தியாவும் உகண்டாவும் ஊசி போட வேண்டும். இந்தப்பயமே பல நாடுகளின் பொருளாதார நிபுணர்களையும் பீடித்துள்ளது.

குறிப்பாக 2008 ம் ஆண்டு ஜீலைமுதல் தங்கம் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் விலை லேசாக குறைந்தமையால் பெரியதொரு பொருளாதார தேக்கம் ஏற்பட்டமையும் அமெரிக்க நாட்டின் பல வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாக இழுத்து மூடப்பட்டமையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதுபோன்றதொரு நிலை வந்துவிடலாம் என்றே நிபுணர்களின் இன்றய அச்சமாகவுள்ளது.

சரி தங்கத்தில் அமெரிக்கா போன்ற நாடுகளில் முதலிடுவதற்கான காரணம் என்ன? ஏன் இவ்வளவு மதிப்பு தங்கத்திற்கு வழங்கப்படுகிறது. இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் நாணய செலவாணியில் தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. இதனைவிட ஒருநாட்டின் செலவாணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவர். அத்துடன் மத்திய வங்கியிலுள்ள தங்கத்தின் மதிப்புக்கேற்ப செலவாணி அல்லது நாணயம் அல்லது ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படுகின்றன. இதிலிருந்தே தங்கத்தின் வீழ்ச்சி அல்லது எழுச்சி என்பவற்றால் சர்வதேச அளவில் பொருளாதாரமானது எவ்வாறான மாற்றங்களுக்கு உள்ளாகுமென்றுதெரிகிறது.

தற்பேது ஏற்பட்ட தங்க விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவதானது. ஜரோப்பிய நாடுகளில் ஒன்றானதும் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள 3வது பெரிய தீவாகவும் விளங்கும் சைப்ரஸ் நாட்டின் அதிகளவான தங்கம் விற்பனைக்கு வந்தமையாகும். அந்த நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமையை சமாளிக்க அந்த நாடு 53 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள தங்கத்தினை சர்வதேச சந்தையில் விற்பனை செய்யத்துவங்கியுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்ட தங்க விலை வீழ்ச்சிக்கு அந்த தங்கத்தின் வருகையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதை விட வேறு சில காரணங்களும் உள்ளன.

உலகிலேயே அதிகளவான தங்க இருப்பை வைத்துள்ள நாடாக இந்தியா விளங்குவது குறிப்பிடத்தக்கது. அதிக அளவு  தங்க முதலீட்டாளர்களை கொண்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவினுடைய பொருளாதாரம் கடந்த இரு ஆண்டுகளிலே என்றுமில்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்ததன் காரணமாக அந்நாட்டில் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் பலரும் தங்கத்தினை விற்பனை செய்து அதற்குப் பதிலாக பங்குச்சந்தையில் முதலீடு செய்துவருகின்றனர். இதன் காரணமாக அங்கு தங்கத்தின் கேள்வி குறைவடைந்துள்ளது. இதுவும் சர்வதேச அளவில் தங்கத்தின் சரிவுக்கான காரணியாக விளங்குகிறது.

இதற்கு அடுத்தாற்போல் உலகின் மிகப்பெரிய தங்க சந்தைகளாக இருக்கக்கூடிய இந்தியாவிலும் சீனாவிலும் தங்கத்தின் மீதான மோகம் தொடர்ச்சியாக அதிகரித்ததன் விளைவாக அதிகளவான தங்கத்தை இறக்குமதிசெய்துவந்தன. ஆனால் தங்தத்தின் விலையானது எல்லை தாண்டிச்சென்றமையால் அதை வாங்குவதை குறைத்துவிட்டன. அத்துடன் இந்திய  மத்திய அரசானது தங்கத்துக்கான இறக்குமதி வரியையும் உயர்த்தியிருந்தது. காரணம் தங்கத்தில் போடப்படும் முதலீடுகளால் நாட்டுக்கு எந்தவிதமான லாபமும் இல்லை என்பதுடன் மக்களின் இந்த முதலீடுகளை வங்கிகளின் சேமிப்பிலும் பங்குகளிலும் போடச்செய்வதற்காகவும் அது இறக்குமதி வரியை உயர்த்தி இருந்தது. இதனால் தங்கத்தின் விலை ஒரளவுக்கு மேல் சென்றதால் அனேகர் அதை கொள்வனவு செய்வதை தவிர்த்தனர்.

இதனிடையே மற்றுமொரு உலகின் மிகப்பெரிய தங்கச்சந்தையான சீனப்பொருளாதாரமும் மூச்சடைக்க தங்கத்தின் இறக்குமதியை குறைத்துக்கொண்டது. எனவே அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய சந்தைகளில் தங்கத்தின் டிமாண்ட் குறைய சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைந்தது.

இவற்றின் பின்னணியில் உலகின் முன்னணி தங்கச் சுரங்க உரிமையாளரான பாரிக்கோல்ட் கோப்ரேஷன் தனது தங்கம் வெட்டி எடுக்கும் பணியை 10 சதவீதமளவுக்கு குறைத்துவிட்டது. காரணம் சிறிய அளவு தங்கத்தினை வெட்டி எடுப்பதற்கு பாரிய அளவு முதலீடு தேவைப்படுகிறது. ஆக சர்வதேச அளவில் தங்கத்தின் வீழ்ச்சியானது அந்த நிறுவனத்தையும் பாதித்திருக்கிறது.

சரி தங்கத்தின் விலையானது ஒர் எல்லையைதாண்டி சென்றமையால் தங்கம் வாங்க முடியாமல் ஆதங்கப்பட்டவர்கள்  தற்போதய காலத்தினை பயன்படுத்தி கொள்வது நல்லது. தற்போது ஏற்பட்ட தங்கத்தின் விலைச் சரிவினையடுத்து  வங்கிகளும் தங்க நகைகளின் தற்போதய பெறுமதிக்கேற்ப அடைவுக்கான பணத்தை வழங்குகின்றன. அந்த வகையில் ஒரு பவுணுக்கு 32ஆயிரம் ரூபாமுதல் 20 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

குறித்த ஓரு தொகை பணத்தை எந்த விதமான முதலீடும் இல்லாமல் வைத்திருந்தால் பணவீக்கத்தின் காரணமாக காலம் செல்ல செல்ல பணப்பெறுமதி குறைந்துவிடும். ஆனால் தங்கத்தில் முதலிட்டால் காலம் செல்ல செல்ல அதன் பெறுமதி அதிகரிக்கும் என்று நம்பியவர்க்கெல்லாம் இப்போது பெரும் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தங்க முதலீட்டாளர் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனால் தங்க விலை  இன்னமும் குறைய வாய்ப்புள்ளது. இதைவிட  தங்க நகைகளை பயன்படுத்துவோருக்காககூட இப்பொழுது 1 கிராம் தங்கத்தினாலான நகைகள் விற்பனைக்கு வந்துள்ளது. இவை கவரிங் நகைகள் போன்று கறுக்கமாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது. சாதணமாக வெளியில் செல்லும்போது பயமின்றி அணிந்து செல்லலாம். மக்கள் இவற்றை வாங்கி பயன்படுத்த ஆரம்பிக்கும்போது தங்கத்துக்கான கேள்வி மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனாலும் தங்கதின் விலை குறையலாம். இருந்தாலும் திடீரென அதன் விலை அதிகரிக்கலாம் என்றும் சிலர் கூறாமலில்லை தங்கத்தின் விலை அதிகரிக்குமா குறையுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
                                                                                                                                  raja